Skip to main content

மாணவன் வெட்டிப் படுகொலை! சக மாணவன் கைது

 

Student passed away police arrested his friend

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள டி. கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது பதினேழு வயது மகன் கோகுல் இவர் திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு இவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் வெகுநேரமாகியும் கோகுல் வீடு திரும்பவில்லை. அவரது தாயார் ஜெயபாரதி கோகுல் வைத்திருந்த செல்போனை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தனது உறவினர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடியுள்ளனர்.


இந்த நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் திருக்கோவிலூர் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உடலில் வெட்டுக் காயங்களுடன் கோகுல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த டி.எஸ்.பி பழனி, திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பேனா கத்தி, வீச்சரிவாள் ஆகியவை கிடைத்துள்ளன. இதையடுத்து கோகுலின் தாயார் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில், கோகுல் உறவினர்கள் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளி விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனர். 

 

அதன்படி போலீசார், கோகுலுடன் படிக்கும் கனகநந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக பள்ளி மாணவனை (17 வயது) சந்தேகத்தின் பேரில் தேடி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நான் குண்டாக இருப்பதை கண்டு என்னை கோகுல் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருந்தான். நேற்று முன்தினம் என்னை கிண்டல் செய்யும் போது என்னை சீண்டி அசிங்கப் படுத்தினான். இதனால் கடும் கோபமடைந்த நான், அவனை பழிவாங்க முடிவு செய்தேன். அதன்படி வெளிப்படையாக கோபத்தைக் காட்டாமல் இருசக்கர வாகனத்தில் கோகுல் வீட்டுக்குச் சென்று அவனை ஓட்டலுக்கு சாப்பிட போகலாம் என்று நட்பாக பேசி  அழைத்து வந்தேன். 

 

வரும்போது திருக்கோவிலூர் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகே காட்டுப் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் சிறுநீர் கழிப்பதாக கூறி இறங்கி கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். அப்போது நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினேன். இதை எதிர்பார்க்காத கோகுல், என்னிடம் எதிர்த்து சண்டைக்கு வந்தான். அப்போது நான் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து அவனை சரமாரியாக வெட்டினேன். அவன் தன்கையால் தடுத்தபோது கை துண்டானது. நிலை தடுமாறி கீழே விழுந்த கோகுலை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டேன்” இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்தார். 


இந்த வாக்குமூலம் அளித்தபோது அந்த மாணவன் கதறி அழுததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் ஒத்த வயதுள்ள ஒரு மாணவன் ஒருவன் மட்டுமே கொலை செய்திருக்க முடியுமா? இன்னும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.