Skip to main content

மாணவியின் உயிரை பறித்த மார்ஃபிங் புகைப்படம்! 

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Student  passed away Due to Morphing photo

 

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சைபர் க்ரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர். 

 

சமீபத்தில் கேரள வாலிபர் ஒருவர், குமரி மாவட்டம் பளுகல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியைக் காதலிப்பதாகக் கூறி அந்த மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டதால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குமரி மாவட்டம் பளுகல் மருதன்விளையைச் சேர்ந்த பீனா, வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரின் ஒரே மகள் ஆதிரா (19), படந்தாலுமூட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் வணிகவியல் 2ஆம் ஆண்டு படித்துவருகிறார். இவர், படந்தாலுமூட்டில் உள்ள அவரது உறவினர் அஜி என்பவர் வீட்டில் தங்கி படித்துவந்தார்.

 

கடந்த 23ஆம் தேதி மாலை அஜி வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி அதிரா, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்ற உறவினர்கள் வீட்டிற்கு வந்து ஆதிராவின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு ஆதிராவின் தற்கொலை குறித்து அவர்கள், பளுகல் காவல் நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த காவல்துறையினர், ஆதிராவின் உடலைக் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் ஆதிராவின் செல்ஃபோனை சோதனை செய்தனர். அப்போது, அவர் கடைசியாக கேரள வாலிபர் ஒருவரிடம் பேசியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது, ‘ஆதிராவுக்கு கேரளா திருச்சூரைச் சேர்ந்த அஜய் என்ற வாலிபருடன் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு வாட்ஸ் அப் பழக்கம் அவர்களைக் காதலர்களாக மாற்றியுள்ளது.

 

இந்த நிலையில் அஜய், ஆதிராவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆதிராவுக்கு அனுப்பியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிரா, அவரிடம் சத்தம் போட்டு அந்தப் புகைப்படத்தை மாற்றச் சொல்லியிருக்கிறார். அதற்கு அஜய் 10 லட்சம் தந்தால் மாற்றலாம் என்றும் இல்லையென்றால் அந்தப் படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடப் போவதாகவும் கூறி அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். 

 

ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் இருக்கும் ஆதிராவின் தாயார் பீனாவுக்கும் அந்தப் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஆதிரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து ஆதிராவை அஜய் மிரட்டி வந்துள்ளார். அதற்கு உடந்தையாக அஜய்யின் பெற்றோரும் இருந்துள்ளனர். இதில் ஆதிரா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்றும் ஆதிராவை அவர் மிரட்டியுள்ளார். அதனால், யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஆதிரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்’ என்று தெரிவிக்கின்றனர். 

 

மேலும், ஆதிரா தற்கொலை வழக்கில் இது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேசமயம், இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள பளுகல் போலீசார், கேரள போலீசார் உதவியுடன் அஜயை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.