ADVERTISEMENT

கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை

04:16 PM Jan 11, 2024 | ArunPrakash

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டைக்கு அருகே உள்ளது காவலர் குடியிருப்பு ரேஷன் கடை தெரு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு 44 வயது ஆகிறது. இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மாரியம்மாள். இவருக்கு 40 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு 14 வயதில் நரேன் மற்றும் 10 வயதில் சுர்ஜித் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நரேனை அழைத்த பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு செலுத்த வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணத்தை உடனே கட்டும்படி அறிவுறுத்தியுள்ளனர். உடனே இது குறித்து தனது பெற்றோரிடம் நரேன் கூறியிருக்கிறார். அப்போது, விரைவில் பணத்தை செலுத்திவிடுவதாக கூறிய பெற்றோரால் பள்ளி கட்டணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட முடியவில்லை. இதனால், நரேனின் வகுப்பு ஆசிரியையிடமும், பள்ளியின் முதல்வரிடமும் கூடிய விரைவில் பள்ளி கட்டணத்தை கட்டி விடுவதாக நேரில் சென்று நாகராஜன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், திருநெல்வேலியில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு, கடந்த ஜனவரி 2-ஆம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அப்போது, பள்ளிக்குச் சென்ற நரேனிடம், பள்ளி கட்டணம் குறித்து பெற்றோரிடம் பேசி, விரைவில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். ஆசிரியர் சொன்னது போல, நரேன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பெற்றோரிடம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அதனால், ஓரிரு நாட்களில் சேர்த்து கட்டலாம் என இருந்துள்ளனர். இந்நிலையில், மறுபடியும் கடந்த மூன்றாம் தேதி பள்ளியில் தேர்வு நடந்துள்ளது. அப்போது, ஏராளமான பள்ளி மாணவர்களுக்கு முன்பாக, நரேனை அழைத்த வகுப்பு ஆசிரியை ஏன் இன்னும் பள்ளி கட்டணத்தை செலுத்தவில்லை என்று கேட்டுள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளான மாணவன் நரேன், மீண்டும் தனது பெற்றோரிடம் கூறி, உடனடியாக பள்ளிக் கட்டணத்தை செலுத்தும்படி கூறியுள்ளார். மேலும், இதனால் தனக்கு கூச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் காட்டும் கெடுபிடியால், நான்காம் தேதி தனது மகனை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளி கட்டணம் தயாரானதும் கட்டணத்தை செலுத்திய பிறகு பள்ளிக்கு செல்லலாம் என்று கூறியுள்ளனர். இதனால் நரேன் பள்ளிக்குச் செல்லாமல் அன்று வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நரேனின் தம்பி சுர்ஜித்தை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது தாயார் மாலை சுமார் 4 மணியளவில் பள்ளிக்குச் சென்று, மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் கதவு உட்புறமாக தாழ்ப்பால் போடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நரேன் அம்மா, கதவை தட்டிப்பார்த்திருக்கிறார், திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காத காரணத்தால், அச்சமடைந்த நரேனின் தாயார், பதற்றத்தோடு அக்கம் பக்கத்தினருக்கும் தனது கணவருக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவு திறக்கப்பட்டுள்ளது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் படுக்கை அறையில் நரேன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இது குறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மாணவனின் தற்கொலையால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அந்தப் பகுதியியைச் சேர்ந்தவர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனே, அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் பள்ளி தாளாளர் மீதும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கையை போலீசார் உடனே கேட்காத காரணத்தால், நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றிருக்கிறது.

அதன் பின்னர், பாளையங்கோட்டை பொறுப்பு உதவி கமிஷனர் ஆவுடையப்பன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தலைமையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்டோர், சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, காவலர்கள் சொல்வதை ஏற்காமல் கோஷம் போட்டதால், அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.

இதில், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் சில மணி நேரம் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் தனியார் பள்ளி மாணவன், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT