
அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக் கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மதம் மாற கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. மாணவியின் தற்கொலை குறித்து தஞ்சாவூரில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கா கனூப் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைவேலு, விசாரணை அதிகாரியான வல்லம் டி.எஸ்.பி. பிருந்தாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கூறுகின்றன. இதில், மாவட்ட காவல்துறை எஸ்.பி.ரவளிபிரியா, கோட்டாட்சியர் ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன், துணை ஆட்சியர் சுபத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, விசாரணை ஆணையத்திடம் தங்கள் தரப்பு விளக்கங்களை அளிப்பதற்காக மைக்கேல்பட்டி கிராம மக்கள், சம்மந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது. அந்த கிராமத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பைப் போட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.