Advertisment

மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவு

student incident cbi investigation madurai high bench order

Advertisment

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளிக் கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இதனிடையே, அந்தத் தனியார் பள்ளி சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், இவ்வழக்கு குறித்த விசாரணை முறையாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 53 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. எனினும், அந்த வீடியோவை எடுத்த நபர் ஆஜரான நிலையில், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆகவே, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தடய அறிவியல் துறையின் அறிக்கைக்காகவும் தாங்கள் காத்திருக்கிறோம். ஆகவே, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கு விசாரணை தொடக்கத்திலேயே தஞ்சை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மதம் மாறச் சொன்னதாகக் கட்டாயப்படுத்தப்படவில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே, இவ்வழக்கில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆகவே, இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்" என்று வாதிட்டார்.

பள்ளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாணவியை அவரது சித்தி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினார். மாணவிக்கான கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைப் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. தங்கள் பள்ளி மீது அவதூறான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு அது அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது" என்ற வாதத்தை முன் வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பினைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், இன்று (31/01/2022) மாணவியின் தற்கொலை வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாத நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

incident order student
இதையும் படியுங்கள்
Subscribe