
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் துறையில் பயிலும் 2-ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் லேப் அசிஸ்டெண்டாக இருப்பவர். பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழக்கிழமை இரவு புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சௌமியா கூறுகையில், 'சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில், பணியாற்றும் லேப் அசிஸ்டன்ட் ஒருவர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறையினர் தலையிட்டு, அவர் மீதான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி முதல்வர் மற்றும் துறை தலைவரிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. நமது டிபார்ட்மெண்ட் பெயர் கெட்டுப் போய்விடும், இதைப் பற்றி மாணவர் சங்கத்திடம் போய் பேச வேண்டாம்' என கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட மாணவி உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்ட போது சம்பவம் உண்மை எனத் தெரியவந்தது. மேலும் வேதியியல் துறையில் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாணவிகள் தெரிவித்தனர். எனவே காவல்துறை புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். சிதம்பரத்தில் அரசு கல்லூரி மாணவி மீது பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக புகார் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.