Student of acid-laced soft drink; Parents refuse to buy the body

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்பல் அருகே கடந்த 3 ஆம் தேதி ஆறாம் வகுப்பு மாணவனுக்கு மற்றொரு மாணவன் அமிலம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததால் இரு சிறுநீரகமும் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்பல் அருகே அதங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவர் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த உடன் படிக்கும் மாணவன் அவருக்கு குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதனை குடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற மாணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Advertisment

மருத்துவர்கள் பரிசோதித்ததில் அமிலம் கலந்த குளிர்பானம் குடித்ததால் இரு சிறுநீரகமும் செயல் இழந்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். சில நாட்கள்மிகத்தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சிகிச்சை பெற்று வந்தார். சிறுவனின் வாயில் புண் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் நெய்யாத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 14 நாட்களாக உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மாணவனின் உடலை வாங்கப் போவதில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். தன்மகனுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை பள்ளி நிர்வாகம் தர மறுப்பதாக குற்றம் சாட்டிய பெற்றோர் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்

.