சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாஜி என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குத் தோல் தொழில்நுட்பம் குறித்த பாடப்பிரிவில் நாமக்கல்லைச் சேர்ந்த சபரீசன் என்ற மாணவர் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இந்த மாணவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவனின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் கடந்த 10 நாட்களாக சக மாணவர்களிடம் தனக்குச் சொந்த ஊரை விட்டு வந்து இங்குப் படிக்க விருப்பமில்லை என்று கூறியிருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மாணவனின் தற்கொலை குறித்து நாமக்கல்லில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு பிறகே உண்மையான காரணங்கள் தெரியவரும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் தற்கொலை செய்வதற்கு முன்பு ஏதேனும் கடிதங்கள் எழுதி வைத்திருக்கிறாரா?, பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவரது செல்போனை ஆய்வு செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.