
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வும் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் கனவுகளுடன் இருக்கும் மாணவர்கள் கடும் உழைப்பினை சிந்திப் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்தாண்டிற்கான நீட் தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அச்சத்தின் காரணமாக மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அனிதா தொடங்கி தற்போது வரை நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.