Skip to main content

வன்கொடுமையை வேரறுத்த கல்வி; சாதித்த சின்னதுரை!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
student Chinnadurai who excelled in class 12 despite many difficulties

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முனியாண்டிக்கு மகன் சின்னத்துரை மற்றும் ஒரு மகள் உள்ளனர். வள்ளியூரிலுள்ள தனியார் பள்ளியல் படித்தபோது கடந்த ஆண்டு ஆகஸ்டு 10 ஆம் தேதியன்று இரவு இவர்களது வீடு புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேர் மாணவன் சின்னதுரையையும் அவரது சகோதரியையும் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இது தொடர்பான விசாரணையில் சாதிய வன்மத்தால் சக மாணவர்களாலேயே சின்னதுரை தாக்கப்பட்டது தெரிய வந்தது. பட்டியலின மாணவனுக்கு நேர்ந்த இந்தக் கொடூரச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவன் சின்னதுரை தன் ப்ளஸ் 2 காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார். முதல்வர் ஸ்டாலினும் உதவ நெல்லை திருமால் நகரில் அவர்களுக்கு அரசு வீடு ஒதுக்கியதால் அங்கு குடியேறினர். அங்கிருந்தபடியே அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவன் சின்னதுரை ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் 600 க்கு 469 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

மரணப்படிகளைமிதித்துவிட்டு திரும்பிய மாணவன் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றது பரவலாகப் பேசப்பட்டது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மாணவன் சின்னதுரை அவரிடம் வாழ்த்துப் பெற்று திரும்பியிருந்தார். “அந்தச் சம்பவத்தில் என்னோட உசுரே போயிறும்னு நெனைச்சேன். நாலுமாசம் கைகளைத் தூக்க முடியல வலியோடயும் வைராக்கியத்தோடயும் முயற்சி பண்ணேன் என்மேல இரக்கப்பட்டு பள்ளி ஆசிரியரே மருத்துவமனைக்கு வந்து எனக்கு மூணு பாடங்கள நடத்திட்டுப் போவாங்க. தாக்குதல் சம்பவத்தை தனிமைல நெனைச்சு பயத்திலயும், பதட்டத்திலும் தூக்கம் போயிறும். மூளையிலயும் மனசுலயும் அது பத்தன எண்ணம்தான். என்னோட அம்மாவும், தாத்தாவும் நடந்தத நெனைச்சு கலங்கப்பிடாது.

student Chinnadurai who excelled in class 12 despite many difficulties

ஒரே சிந்தன படிப்புன்னு அதையே நெனைச்சா பயமும் நடுக்கமும் போயிடும்னு தெம்பு சொல்லுவாங்க. வகுப்பு சாரும் எனக்கு மனசு தெம்பாகிற வரைக்கும் தைரியம் சொல்லுவாக. அவுங்க முயற்சியிலயும் குடுத்த தெம்புலயும் எம் மனசும் மூளையும் ஒரு இடத்துக்கு வந்துச்சு. தெம்பா, படிப்பே சொத்துன்னு படிச்சேன். ஆசிரியர்கள் எனக்கு உதவுனாக. எல்லோரோட ஒத்தாசைலயும் நா தேர்வுல நல்ல மார்க் வாங்க முடிஞ்சது. இனிமே என் வாழ்கைல எந்தச் சங்கடம் வந்தாலும் தைரியமா சந்திப்பேன். அந்தளவுக்கு தயாராயிட்டேன். முதல்வரய்யாவும் என்னய வாழ்த்துனாக. படிப்பு மூலம் பெரிய பொறுப்புக்கு வரணும்றதுதான் என்னோட விருப்பம்” என்று அழுத்தமாகச் சொன்னார் மாணவர் சின்னதுரை. கல்வி. சாதிய வன்மத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்