Student brain dead after being speared in the head; Prepared suicide attempt; Cuddalore in tragedy

Advertisment

ஈட்டி எறிதல் பயிற்சியின் போது தலையில் பாய்ந்த ஈட்டியால் பள்ளி மாணவன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் (15) இவர் வடலூரில் உள்ள எஸ்டி சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து மாலை பள்ளி திடலில் விளையாட்டுப் பயிற்சியில் வட்டு எறியும் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அதே திடலில் மறுமுனையில் ஈட்டி எறிதல் பயிற்சி நடந்து கொண்டிருந்தது.

மற்றொரு மாணவன் ஈட்டி எறிந்த போது எதிர்பாராத விதமாக கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கிஷோரை மீட்டு அருகில் இருந்தவர்கள் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் மாணவன் கிஷோர் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

பின்னர் அங்கிருந்து விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிஷோர் மாற்றப்பட்டார். தற்போது கிஷோர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது மகன் மூளைச்சாவு அடைந்ததை கேள்விப்பட்ட அவரது தாயார், கடந்த 4 நாட்களாக போலீசார் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் 'புள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே' என மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பள்ளியில் உள்ள சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் பயிற்சி ஒரே இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் வழங்கப்பட்டது தான் இந்த விபத்துக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈட்டி எறிதல் பயிற்சியின்போது மாணவன் தலையில் ஈட்டி பாய்ந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் பயிற்சியாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.