
'அப்பா குடிப்பழக்கத்தை விட்டுடுங்க. என் ஆத்மா சாந்தியடையும்' என கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது 16 வயது மகள் விஷ்ணுபிரியா, குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 410 மதிப்பெண் பெற்றுள்ளார்.
விஷ்ணுபிரியாவின் தந்தை குடித்துவிட்டு வந்து தினமும் வீட்டில் சண்டை போடுவதை பார்த்து மனவருத்தத்தில் இருந்துள்ளார். மன வேதனை அடைந்த விஷ்ணுபிரியா ஜூன் 3ஆம் தேதி மாலை கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் 'எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும்' என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.