/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/temple-issue-std_0.jpg)
கடலூர் மாவட்டம் விருதாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக கரோனா ஊரடங்கால் கோவில் பூட்டப்பட்டுள்ளது. அதே சமயம் கோவில் குருக்கள் சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து, வழிபாட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாக நந்தவனத்தில் அமர்ந்து கோவில் ஊழியர்கள் மது குடிப்பதும், மாமிசம் சாப்பிடுவதும், இயற்கை உபாதைகள் கழிப்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அதையடுத்து கோவில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தது. இதனிடையே கோவிலின் மற்றொரு ஊழியரான ஆனந்தகுமார் மற்றொரு தரப்பினர் குறித்து வசைபாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் கொளஞ்சியப்பர் கோவில் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தியாக.நீதிராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "மணவாளநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொளஞ்சியப்பர் கோவிலில் சமீப காலமாக தொடர்ந்து ஊழியர்கள் கோவில் நிர்வாகத்திற்கும், பாரம்பரியமிக்க கோயிலுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்யும் நோக்கத்தோடு கோவில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல், கோவில் பக்தர்கள் அதிர்ச்சி அடையாமல் இருக்கவும் அரசு விதிப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களை உடனடியாக பணியிடை மாற்றம் செய்து புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/temple-issue-in.jpg)
மேலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் பொருட்டு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு கடலூர் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)