
பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றுடன் 21வது நாளாக நீடித்து வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் இடத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி, சுப்பு, பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாள் போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ். கம்யூனிஸ்ட். ம.தி.மு.க., கொ.ம.தே. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று 2-வது நாளாகக் காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.முக செயலாளர் முத்துசாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம் பழனிச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், கம்யூனிஸ்ட் கட்சியினர், கொ.ம.தே.க கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளான நேற்றும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்றனர். இனிமேலும் போராட்டம் நீடிக்கும் என அறிவித்துள்ளனர்.