Skip to main content

“மணிப்பூரை காப்பாற்றுங்கள்..” - தமிழகத்தில் தொடரும் போராட்டம்!

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

struggle in Tamil Nadu condemning incident to Manipur

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மலைகள் சூழ்ந்த பிரதேசம் மணிப்பூர் மாநிலம். இந்த மாநிலத்தை மத்தியில் ஆளும் பாஜக கட்சியே மணிப்பூரிலும் ஆட்சி செய்கிறது. மணிப்பூரில் பழங்குடியினர் மிக அதிகமாக வசித்து வருகிறார்கள். பல இனக் குழுக்கள் உண்டு. அங்கு மெய்தி என்ற இனக்குழு, தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. நீண்ட நாளாகப் பல்வேறு இனக் குழுக்களின் போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மணிப்பூர் நீதிமன்றம் மெய்தி இன மக்களின் கோரிக்கைக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு அறிவிப்பை செய்தது. அதன் பிறகு அங்கு பூர்வக் குடிகளாக உள்ள குக்கி பழங்குடியினர் தங்கள் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக போராட்டத்தில் இறங்கினார்கள். அந்த உரிமை போராட்டம் அரசியல் சூழ்ச்சியால் வேறு பல இனக் குழுக்களைத் தூண்டிவிட்டு வன்முறையாக மாறியது. மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கு மேலாக வன்முறை தீ பற்றி எரிகிறது.

 

அங்கு சிலர், ஒரு சாராரைத் தூண்டிவிட்டு மக்களை அடித்தும், நெருப்பில் எரித்தும், துப்பாக்கியால் கொலை செய்தும், பெண்களை ஈவு இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தும், பொதுவெளியில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தி மனித சமூகத்திற்கு ஒவ்வாத பல்வேறு கொடுமைகளை அங்கு நடத்தி வருகின்றனர். துயரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகள் வெளியே தெரியாதபடி மணிப்பூர் பாஜக அரசு மூடி மறைத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

 

இதன் ஒரு பகுதியாக குக்கி இனப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணமாக, பல நூறு பேர் மத்தியில் வீதிகளில் நடக்க வைத்து அவர்களைப் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து பெரும் துயரத்தை ஏற்படுத்தினார்கள் ஒரு பிரிவினர். அந்த வீடியோ காட்சிகள் சென்ற வாரம் வெளிவந்து இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே அந்த துயர சம்பவத்தைப் பேச வைத்தது. ஆனால் இந்தியாவில் ஆளும் பாஜக மோடி அரசு, நீதி என்கிற அளவுகோலில் எந்த நடவடிக்கையும் இல்லாமல், எப்படியாவது இந்த பிரச்சனையைத் திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

 

மேலும், இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மணிப்பூர் சம்பவத்தைப் பேச வேண்டும்; இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி பதில் சொல்ல வேண்டும்; நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் வந்து மோடி பதில் சொல்ல வேண்டும் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் பற்றி பாராளுமன்றத்துக்குள் பேச மறுத்ததோடு ஒரு வகையில் மறைந்திருப்பது போல் அவரது நடவடிக்கை இருந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் அப்பாவி மக்களுக்கு நீதி கேட்டும், அங்கு வன்முறைகளை உடனே நிறுத்தக் கோரியும், அங்கு வாழும் மக்களுக்கு அமைதியை விரைவில் கொடுக்கக் கோரியும் இந்திய அளவில் பல்வேறு அமைப்புகள் ஒவ்வொரு ஊர்களிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 

 

அந்த வகையில், தமிழகத்தில் மணிப்பூர் மக்களுக்காக ஊர்கள் தோறும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற மனித உரிமை அமைப்பின் தமிழ்நாடு கிளை, கோவையில் மணிப்பூர் சம்பவத்திற்கு மத்திய பாஜக அரசைக் கண்டித்து 25 ஆம் தேதி கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் மணிப்பூரில் உள்ள குக்கி இனப் பழங்குடியினப் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் கோவையில் வசிக்கிற அல்லது அருகருகே இருப்பவர்கள் அங்கு ஒன்றாகக் கூடி, “மணிப்பூரை காப்பாற்றுங்கள்... மணிப்பூரை காப்பாற்றுங்கள்... மணிப்பூரில் வாழும் எங்கள் மக்களை காப்பாற்றுங்கள்....” எனக் கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

 

நாடு முழுவதும் வலுப்பெற்று வரும் குரல்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த பதிலும் கொடுக்காமல் மௌனமாகக் கடந்து போவது மக்களுக்குச் செய்கிற துரோகம் என்பதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என்பதே மனிதநேயவாதிகளின் கருத்தாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்