தமிழ்நாட்டிலுள்ள வக்பு வாரிய சொத்துக்கள் என அறியப்பட்டவைமீது பரிவர்த்தனை செய்யக்கூடாது எனத்தமிழ்நாடு வக்பு வாரியம், பதிவாளர் அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் கடந்த ஜனவரி மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வே நம்பரில் உள்ள சொத்துக்களைவிற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அறிவிப்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் என்றும், யாரும் உரிமை கோர முடியாது எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அந்த சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மண்ட் செய்யவோ இயலாமல் பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பாதிக்கப்பட்டவர்கள் 200க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் பதிவுத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது வக்பு வாரிய பரிந்துரையைப் புறக்கணிக்க வேண்டும், சட்டப்படி கிரயம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டும்.87 ஆண்டுகள் எவ்விதத்தடைகளும்இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் என கேள்வியெழுப்பும் அவர்கள் வருவாய்த்துறை ஆவணங்களில் வக்பு வாரிய சொத்து என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு வக்பு வாரிய பரிந்துரையைப் புறக்கணிப்பு செய்ய சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், சட்டப்படி கிரயம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.