Struggle for Drought Relief; More than 300 farmers arrested

ராமநாதபுரம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வறட்சி நிவாரணம் கோரிவிவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடும் பாதிப்புகளைச் சந்தித்தனர். எனவே தங்களுக்கு வறட்சி நிவாரணம் வேண்டும் என கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன்பு நேரடியாக வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வருவாய் அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அதை ஏற்காத விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், இறுதி வரை மாவட்ட ஆட்சியர் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். இதனால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.