
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய பாஜக அரசு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே கல்விக்காக மத்திய அரசு மாநிலத்திற்குத் தரவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி விடுவிக்கும் என மத்திய கல்வி அமைச்சர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் பெரும் மக்களிடையே கொதிநிலையை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஆளுங்கட்சியும் தமிழ் இயக்கங்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழ் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ் மாணவர் என்ற கூட்டமைப்பு சார்பில் திமுக மாணவர் அணி ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சிகளின் மாணவர் இளைஞர் மன்றத்தினர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அதன்படி திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தேவராஜ் தலைமையில் 500க்கும் அதிகமானவர்கள் ஊர்வலம் நடத்தினர். அப்பொழுது மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஊர்வலத்தின்போது, இந்தியை திணிக்காதே தமிழை அழிக்காதே என்கிற குரல்கள் மாணவர்கள் எழுப்பினர்.
மத்திய அரசுக்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தி திணிப்பை எதிர்த்தும் , தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை கொடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். முதற்கட்ட போராட்டம் நடத்தியுள்ள தமிழ் மாணவர் மன்ற திமுக மாணவர் அணியினர் அடுத்த கட்டமாக அடுத்தடுத்த போராட்டங்களை அனைத்து மாணவர்களையும் இணைத்துத் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.