Struggle on behalf of Barber Workers Welfare Association

Advertisment

தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் அத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கண்டித்து 7ந் தேதி ஒரு நாள் சலூன் கடைகளை அடைத்து தமிழகம் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு காளைமாடு சிலை அருகே சலூன் கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்க செயலாளர் வெங்கடேசன் கூறும்போது, "நாங்கள் பாரம்பரியமாக இந்த முடிதிருத்தும் தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறோம். தமிழகம் முழுக்க 30 லட்சம் தொழிலாளர்கள் இதில் உள்ளார்கள். எங்கள் தொழிலையும் விட்டு வைக்காத சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு புதிய யுத்திகளைக் கையாண்டு எங்கள் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வகையில், முடி திருத்தக் குறைந்த சலுகை கட்டணம் என அறிவித்து எங்கள் முடிதிருத்தும் தொழிலை முடக்க நினைக்கின்றனர்.

எங்களுக்கு இந்த தொழிலை விட்டால், வேறு எதுவும் கிடையாது. இது மட்டும் தான் எங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில்கள் உள்ளன. அவர்கள் அதைச் செய்யட்டும் எனவே முடிதிருத்தும் தொழிலில் அவர்கள் இறங்குவதையும், பல ஊர்களில் அவர்கள் கடைகள் தொடங்குவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உடனே கைவிட வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். எனவே தான் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் முழு கடையடைப்பும் வீதிக்கு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.