
சிவகங்கையில் சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சிவகங்கை அருகே கல்குவாரியில் மண் சரிந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு - குவாரிகளில் விதிமீறல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் பாறைகளை உடைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், இதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பள்ளம் தோண்டப்பட்டதே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், அக்குவாரியில் முறையான ஆய்வை மேற்கொண்டு விதிமீறல் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.