Skip to main content

மணல் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை -தேனி எஸ்.பி எச்சரிக்கை!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

 Strict action if involved in sand theft! Theni SP warning !!

 

தேனி மாவட்டத்தில் மணல் திருட்டு மற்றும் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 162 மணல் திருட்டு கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 180 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவற்றில் மணல் திருட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய 66 ட்ராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரங்கள், 76 மாட்டு வண்டிகள், 22 மோட்டார் வாகனங்கள், 9 மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 186 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறது. மேலும் தொடர்ச்சியாக இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆகவே மணல் திருட்டு கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மணல் திருட்டு கடத்தலுக்கு போலீஸ் அல்லது பிற அரசுதுறையைச் சேர்ந்த அலுவலர்கள் யாரேனும் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் எச்சரித்துள்ளார்.

மணல் திருட்டால் நீர்வளம் குறைவதாகவும், இனி மணல் வழக்கில் முன்ஜாமீன் கிடையாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.