Advertisment

 "கடன் தவணை கேட்டு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை!"  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

publive-image

கரோனா இரண்டாவது அலை நோய்பரவலையடுத்து தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் வருமானம் இன்றி குடும்பத்தை நடத்தவே பல்வேறு இன்னல்களை அனுபவித்துவருகின்றனர். ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள், மகளிர் குழு கடனுதவி நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய கடனுக்கான தவணைத் தொகையைக் கேட்டு பொதுமக்களை நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். குடும்பத்தை நடத்தவே சிரமப்படும் நிலையில் கடனை எப்படி கட்ட முடியும் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், கரோனா காலத்தில் நுண்நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூலிப்பது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நுண்நிதி நிறுவன அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மகளிர் திட்ட அதிகாரிகள், பல்வேறு வங்கிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

பின்னர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி மக்களின் நலனுக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனை எதிர்கொண்டு சமாளிக்கும் விதமாக மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டுவருகிறது. நோய்களைத் தடுப்பதற்குப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கையால் பொதுமக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் இல்லாமல் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் தொழில் கடன், தொழில் சார்ந்த விவசாயக் கடன், வியாபாரக் கடன், சுய உதவிக் கடன் முதலான கடன்களுக்குத் தவணை செலுத்த முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைக் கருத்தில்கொண்டு பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு சில வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதாவது கடன் தவணை மாற்றியமைப்பது, தவணை நீட்டிப்பு, உற்பத்தி பாதித்த பயனாளிகளுக்குப் புதிய கூடுதல் நடைமுறை கடன் வழங்குதல் ஆகியவை ஆகும். எனவே வங்கிகள் அனைத்தும் இந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல் அமைப்புசாரா சிறுமுதலீட்டு தொழில் செய்பவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அதிக அளவில் சிறு கடன்களை நுண்நிதி நிறுவனங்களில் பெற்றுள்ளனர். இந்த நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றவர்கள் மாவட்டத்தில் சில இடங்களில் கட்டாய வசூல் என்ற முறையில் பல இன்னல்களை சந்திப்பதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தவண்ணம் உள்ளது. அதனால் கரோனா காலத்தில் நுண்நிதி நிறுவனங்கள் கட்டாயக் கடன் வசூல் செய்வதோ, மக்களைக் கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. மேலும், கட்டாய வசூல் நடைபெற்றால் அந்தந்த நுண்நிதி நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

corona virus Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe