'' Street dogs starving in curfew '' - Court order appointing committee

கரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது குறித்த நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெரு நாய்கள் மற்றும் விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் தெரு நாய்கள், விலங்குகள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தெரு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு எப்படி உணவு, தண்ணீர் வழங்கலாம் என்பது குறித்த யோசனைகளை தெரிவிக்கும்படி, மனுதாரர் தரப்புக்கும், அரசுத்தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தெரு விலங்குகளுக்கு உணவளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளதாகவும், கால்நடைத்துறையுடன் இணைந்து செயல்பட அந்நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தெரு விலங்குகளுக்கு உணவளிக்க செல்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது எனவும், கடற்கரையில் உலவும் குதிரைகளுக்கும் உணவளிக்க வேண்டும் எனவும், இதற்கு மாநில விலங்குகள் நல வாரியமும், கால்நடைத்துறையும் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் விலங்குகள் நல ஆர்வலர் ஷ்ரவண் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து, தெரு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது குறித்த நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக தமிழக கால்நடைத்துறை கூடுதல் இயக்குனர் அருணாச்சல கனி, ப்ளூ கிராஸ் பிரதிநிதி, வழக்கறிஞர் யோகேஸ்வரன் மற்றும் விலங்குகள் ஆர்வலர் ஷ்ரவண் கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த குழு நாளை கூடி, இதுசம்பந்தமாக ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தனர்.