நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை கால்நடைகளுக்கு இணையாக வளர்ந்துள்ளது. இதனால் நாய்களால் விபத்துகள் அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம் நாய்களுக்கு வெறி நோய் ஏற்பட்டு மனிதர்களையும், கால்நடைகளையும் கடித்துக் குதறும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோழி இறைச்சிக் கழிவுகளை சாப்பிடும் நாய்களுக்குத் தோல் நோய்கள் ஏற்பட்டு பரிதாபமாகச் சுற்றி வருகிறது. அதனால் நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தெருநாய்களால் விபத்துகள் ஏற்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனுக்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் கிருஷ்ணாசிப்பட்டினம், மணமேல்குடி உள்பட ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சி செயலர்கள் தெரு நாய்களைப் பிடித்து இலுப்பூரில் உள்ள தனியார் நாய்கள் காப்பகத்தில் விட வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலர்கள் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளார். இந்த குறிப்பாணையில் அடிப்படையில் மணமேல்குடி ஒன்றியத்தில் சில நாட்களாகப் பிடித்த 50க்கும் மேற்பட்ட தெருநாய்களை ஒரு சரக்கு வாகனத்தில் இலுப்பூரில் உள்ள பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் க்கு கடந்த 5ஆம் தேதி கொண்டு வந்துள்ளனர்.
அதில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்ததைப் பார்த்த டிரஸ்ட் இயக்குநர் வீர.சரத்பவார் இறந்த மற்றும் காயங்கள் உள்ள நாய்களாக உள்ளதால் அதனை இறக்க அனுமதிக்கவில்லை. மேலும் சட்டவிரோதமாக 3 நாட்களாகப் பிடித்து உணவு இல்லாமல் சிறிய வாகனத்தில் அடைத்து வைத்திருந்து கொண்டுவரப்பட்டதால் பல நாய்கள் இறந்துள்ளது. அதனால் நாய்களை இடம் மாற்றத் தேவையான அனுமதியும் பெறாததால் நாய்கள் ஏற்றி வந்த வாகனத்தைத் திருப்பி அனுப்பிவிட்டேன். இது போன்ற செயலில் ஈடுபட்ட மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீர. சரத்பவார் இலுப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/08/pdu-dog-2025-07-08-23-21-46.jpg)