
தமிழகம் முழுவதும் தெருநாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கும், மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்நிலையில் தெருநாய்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (02.05.2025) ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதிலும் குறிப்பாகப் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் தெரு நாய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.