Skip to main content

தெருநாய் தொல்லை; சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Stray dog ​​infestation; Chennai Corporation Action Order

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஈரோட்டிலும், சிவகங்கையிலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க்கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்நிலையில் சென்னையில் 15 மண்டலங்களில் மாநகராட்சியால் கணக்கிடப்பட்டுள்ள சுமார் 93 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு குழு நாள் ஒன்றுக்கு 130 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவர் எனவும், ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவர் நான்கு நாய் பிடிக்கும் பணியாளர்கள், உதவியாளர்கள் இருவர் இடம் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த மூன்று வருடத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட தெரு நாய்களுக்கு வண்ண சாயம் பூசப்பட்டு அதே இடத்தில் மீண்டும் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.