The story of Eleshchi fulfilling the daughter's wish; Appreciation of Minister Anbil Mahesh

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர், தனியார் வங்கியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார். அதன் பிறகு, பூரணம் தனது மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரது மகள்துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

Advertisment

இதையடுத்து, தனது மகளின் நினைவாக, கொடிக்குளம் கிராமத்தில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை அங்குள்ள நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தானமாக வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘நல்ல காரியங்களுக்கு நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்பது எனது மகள் ஜனனியின் ஆசை. அதன்படியே, எனது நிலத்தை பள்ளிக்கு தானமாக கொடுத்துள்ளேன்’ என்று கூறினார். இவரது செயலைபலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசுக்கு தனது நிலத்தை தானமாக வழங்கிய பூரணம் அம்மாளை பாராட்டியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாள்" அவர்களை வணங்குகிறேன். போற்றுகிறேன். மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாளுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாளின் தொண்டு மகத்தானது!

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.