
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். கனமழையால் மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க அரசு துறைகள் ஒருங்கிணைந்து தயார் நிலையில் உள்ளது. உணவு, உடை, மருத்துவம் ஆகிய அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் நிவாரணப் பணிகளை செய்திட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் நின்று மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.