ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மரக்காணம் அருகே புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் அந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர் கனமழை காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீரமைப்பு பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ''சென்னையில் இரவு 8 மணி நிலவரப்படி 381 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையில் தேங்கிய மழை நீரை இரவுக்குள் அகற்ற தீவிரப் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மரக்காணத்தில் 22 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. முந்தைய புயல்களைப் போல் இந்த புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை. மழையின் தாக்கம் குறையும் வரை சென்னையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்படும். சென்னை வானிலை ஆய்வு மையம் சரியான முறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதும் உரிய தகவல்களை எங்களுக்கு வானிலை மையம் கொடுத்தது'' என தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் என்பவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில் கடலூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 20 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் கடலூரில் பல இடங்களில் கடந்த ஐந்து மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.