Skip to main content

10 நாட்களுக்கு கடைகள் மூடல்... வியாபாரிகள் முடிவு... அரசு மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு...

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

shops


திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாபார நிறுவனங்கள் தனிமனித இடைவெளிகளைக் கடைப்பிடிக்காததால் கரோனா பரவல் அதிகரித்தது. சாயர் மோட்டார் குரூப், சுமங்கலி நகைக்கடை, இரண்டு சூப்பர் மார்க்கெட்களில் பணியாற்றியவர்கள் மற்றும் அதன் உரிமையாளர் மற்றும் ஒரு கட்டடப் பொறியாளர் எனப் பலருக்கும் கரோனா வந்துள்ளது.

 

திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளில் சுமார் 60 கரோனா நோயாளிகள் உள்ளனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதனால் திருவண்ணாமலை தாலுக்கா வியாபாரிகள் சங்கம், தனது பொதுக்குழுவைக் கூட்டி வரும் ஜீன் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தன்னிச்சையாகக் கடைகளை மூடுவது என அறிவித்துள்ளனர். இதற்காக அறிவிப்பை தாலுக்கா வர்த்தகர்கள் சங்க தலைவர் தனகோட்டி என்பவர் செய்தியாளர்களை ஜீன் 17ஆம்  தேதி சந்தித்து அறிவித்தார்.

 

இதேபோல் செய்யார், வந்தவாசி, சேத்பட் தாலுக்கா வியாபாரிகள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்தக் கடைகள் மூடல் என்பது ஜீன் 16ஆம் தேதி முதல் என முன்பு அறிவித்தனர், பின்பு தேதி மாற்றி 17 என்றனர், பின்னர் 19 என்றனர், தற்போது 20ஆம் தேதியில் இருந்து என அறிவித்துள்ளனர்.

 

இப்படி தேதி மாறி மாறி அறிவித்தது குறித்து விசாரித்தபோது, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வியாபார சங்க நிர்வாகிகளை மிரட்டினர். நீங்கள் கடையடைப்பு செய்வதை அரசாங்கம் விரும்பவில்லை, கடையை அடைக்ககூடாது என மிரட்டினர். அந்த மிரட்டலால் கடைகளை அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடைகளை அடைத்தால் கரோனா பரவுகிறது என்கிற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும். அதனால் கடைகளை அடைக்க அனுமதிக்காதீர்கள் என அரசு உத்தரவிட்டதால், மாவட்ட நிர்வாகம் அதனை வியாபார சங்கத்தை எச்சரித்தது.

 

அந்த எச்சரிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்கிற சர்ச்சை எழுந்தது. அரசை விட உயிர்தான் முக்கியமென வியாபாரிகள் முடிவெடுத்தே கடையடைப்புக்கு அறிவிப்பு செய்தனர் என்கின்றனர் வியாபாரிகள் தரப்பிலேயே.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.