ADVERTISEMENT

ஆவின் அதிகாரிகளின் உத்தரவு; கேள்விக்குறியாகும் எளியோரின் வாழ்வாதாரம்

02:37 PM Dec 20, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் ஆவின் மூலம் பதப்படுத்தப்பட்டு பாக்கெட் பாலாகவும், பல்வேறு உணவுப் பொருட்களாகவும் மதிப்புக்கூட்டி விற்பனைக்கு வருகிறது. அதனால் ஆவினுக்கு அதிக அளவு பால் தேவைப்படுவதால் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலில் 10% மட்டும் உள்ளூரில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளலாம். மீதமுள்ள 90% பாலை கூட்டுறவு சங்கங்கள் ஒப்பந்தப்படி ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று பால் வளத்துறை அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், பால்வளத்துறை சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் விதமாக கடந்த 10-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 70% செய்து வந்த உள்ளூர் விற்பனையை நிறுத்தியது. இதனால் பொதுமக்கள், டீ கடைக்காரர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் முதுநிலை ஆய்வாளர் திருப்பதி மற்றும் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைவருக்கும் பால் விற்பனை செய்ய முடிவான பிறகு, உள்ளூர் விற்பனை தொடங்கியதுடன், ஆவினுக்கு பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் நாசர் நம்மிடம், “கூட்டுறவு சங்க முறைகேடுகளைத் தடுக்கவும், பிற ஊர்களுக்கு தேவையான பால் அனுப்பவுமே 10% உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள 90% பாலை ஆவினுக்கு அனுப்ப சொல்கிறோம்” என்றார். இந்த நிலையில், நேற்று திங்கள் கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலங்குடி டிஎஸ்பி, கீரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பால்வளத்துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி உள்ளூர் விற்பனை 10% மட்டுமே பால் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், கீரமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் 44% சதவீதம் உள்ளூர் விற்பனை செய்யப்படுவதால் ஆவினுக்கான பால் குறைகிறது. ஆகவே, கீரமங்கலம் பகுதியில் டீ கடைகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் விற்பனை நிறுத்தப்படுகிறது. அதனால் கூட்டுறவு சங்க பணியாளர்கள், பால் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதே போல கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கச் செயலாளர் கணேசன் மற்றும் பணியாளர்கள் கீரமங்கலம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர். டீ கடைகளுக்கு பசும்பால் விற்பனை நிறுத்தியுள்ளதால் செவ்வாய் கிழமை கீரமங்கலம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டீ கடைகள் மூடப்பட்டதுடன் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆவினுக்கு பால் ஏற்றிச் செல்லும் வாகனத்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பான சூழல் நிலவியது.

தகவலறிந்து வந்த கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்த பிறகு, ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலனிடம் பேசினார். டீ கடைகளுக்கு பால் விற்பனையை நிறுத்த வேண்டாம் என்றும், தற்போது உற்பத்தி குறைவாக இருந்தாலும் விரைவில் உற்பத்தி அதிகரிக்கச் செய்து ஆவினுக்குத் தேவையான பாலை அனுப்புவதாகவும் கூறிய பிறகு டீ கடைகளுக்கு பால் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறைபிடிக்கப்பட்ட பால் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ஆவின் துணை இயக்குநர் ஜெயபாலன் நம்மிடம் பேசுகையில், “கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடக்காமல் வரைமுறைப்படுத்தவும், ஆவின் மூலம் தரமான பால் வழங்கவும்தான் உள்ளூர் விற்பனையை நிறுத்தக் கூறியுள்ளோம். வீடுகளுக்குத் தேவையான பால் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடைகளுக்கு வழங்கும் பால் தரம் ஆய்வு செய்து வழங்க வேண்டியுள்ளது. அதனால்தான் ஆவினுக்கு ஏற்றி வருகிறோம். கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்யும் பாலை ஆவினுக்கு அனுப்புவதாகத்தான் ஒப்பந்தம் செய்துள்ளது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT