Stolen temple urns.. police arrested  with in three days

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டீஸ்வரர், விநாயகர், முருகன் உள்ளிட்ட ஐந்து மூலவர்கள் அமைந்துள்ளனர். 'காசியை விட வீசம் பெரிசு விருத்தகாசி' என புகழ் பெற்ற இக்கோயிலில் மார்ச் மாதம் 1ம் தேதி அதிகாலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்ற போது விருத்தாம்பிகை சன்னதி கருவறை கோபுரத்தில் வைத்திருந்த தங்க முலாம் பூசப்பட்ட 3 கோபுர கலசங்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Advertisment

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் மாலா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 300 கிராம் எடை கொண்ட தங்க கலசங்களின் மதிப்பு சுமார் 12 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. புகழ் பெற்ற திருக்கோயிலில் தங்க கலசங்கள் திருடப்பட்டது விருதாச்சலம் நகரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisment

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் விருத்தாச்சலம் நகரத்தில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கலசங்களை திருடியது அழகாபுரம் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பதும், தற்போது அவர் விருதாச்சலம் பெரியார் நகரில் உள்ள அமுதன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. அதையடுத்து தனிப்படை காவல்துறையினர் சந்தோஷ்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்த 3 தங்க கலசங்களையும், திருட்டுக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று நாட்களுக்குப் பின்பு தங்க கலசம் மீட்கப்பட்டதால், விருத்தாசலம் நகர பகுதி வாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.