பெரம்பலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி அன்று கைப்பையில் தங்கம் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு திருச்சி என்.எஸ்.சி.போஸ் ரோடு பகுதியில் பேருந்தில் பயணம் செய்தனர். அப்பொழுது அவர்களிடமிருந்த பையில் இருந்து 27 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் மூன்று பேர் கூட்டாக இதுபோன்று தொடர் வழிப்பறியில் ஈடுபடுவதாக தெரியவந்தது. ரவி என்பவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பெண்களை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா பேசுகையில், “கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 43 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 35 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருச்சி மாநகரில் புதிதாக 2000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டி உள்ளது. ஏற்கனவே உள்ள 1600 கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் செயல்படாமல் உள்ளன.
பைக் வீலிங் செய்யும் இளைஞர்களை அழைத்து தொடர்ந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து ஆலோசனைகளையும் அறிவுரைகளும் பெற்றோர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் திருச்சி மாநகரில் பைக் வீலிங் இல்லாத நிலை உருவாக்கப்படும். 20 பவுனுக்காக ஆள்கடத்தல் நடந்த சம்பவத்தில் கடத்தல் தங்கம் எவ்வளவு என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஐந்து பேரை தேடி வருகிறோம்.” எனக் குறிப்பிட்டார்.