thoothukudi sterlite plant incident tn govt

கரோனா பரவலின் தாக்கத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்தப்படி இருக்கிறது. குறிப்பாக, கரோனா தாக்கத்திற்கு ஆளான மக்களுக்குப் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் சாலைகளிலும், ஆட்டோகளிலும் அவர்கள் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்ஸிஜன் தேவையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

Advertisment

இந்தியாவுக்கு தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும், பற்றாக்குறை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தாலும், ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் மருத்துவமனைகள் திண்டாடுகின்றன.இந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி, தங்களின் ஆலையைத் திறக்க அனுமதி கேட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்!

Advertisment

தென் தமிழகம் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் திரண்டு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். 2018இல் நடந்த மக்களின் நியாயமான கோரிக்கைப் போராட்டத்தை ஒடுக்க நினைத்து போலீஸார் நடத்திய மிருகத்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டது. இனி, ஆலைக்கு அனுமதி தர மாட்டோம் என அழுத்தமாக கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எவ்வளவோ முயற்சிகளை ஆலை நிர்வாகம் எடுத்தும், ஆலையைத் திறக்க முடியவில்லை.

Advertisment

இந்த நிலையில், தற்போது நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, ‘’எங்கள் ஆலையில் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதன் மூலம்தினசரி 1000 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதனால் ஆலையைத் திறக்கவும், ஆக்ஸிஜன் உற்பத்தியைத் துவக்கவும் அனுமதி வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.பாப்டே, “கரோனா வைரஸைத் தடுப்பதில் ஆக்ஸிஜன் முக்கியமானதாக இருப்பதால் வழக்கை நீதிமன்றமே தாமாக விசாரிக்கும்” என்றார்.

இதற்கிடையே, ஆலையைத் திறக்க அனுமதியளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்!