ADVERTISEMENT

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

05:55 PM Dec 24, 2018 | rajavel

ADVERTISEMENT

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ADVERTISEMENT

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் 100வது நாளின் போது (மே 22, 2018), பொதுமக்களுக்கு எதிராக நடைபெற்ற காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை அனைத்துக் கட்சிகளும் அரச பயங்கரவாதம் என கண்டித்திருந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும், குறைந்த தொலைவில் பின்னால் இருந்து சுடப்பட்டிருப்பதாகவும் அவர்களது பிரேதப் பரிசோதனை முடிவுகளை கொண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பிரேதப் பரிசோதனையில் பல்வேறு மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூலம் கிடைத்த அறிக்கைகளை கொண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின்போது, 17 வயதான சிறுமி ஸ்னோலின் பின்பக்கத் தலை வழியாகக் குண்டு பாய்ந்து வாய் வழியாக வெளியேறியுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 40 வயதான ஜான்சி என்ற பெண்ணின் காதில் குண்டு பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதான மணி ராஜன் என்பவரது நெற்றியின் வழியாகக் குண்டு பாய்ந்துள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்களில் எட்டு பேரின் உடலில், பின்புறமாகத் தலை மற்றும் உடல் பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது என அந்த செய்தி தெரிவிக்கின்றது.

இதன்மூலம் மக்களை சுட்டுக்கொன்று அவர்களை முடமாக்கி, அவர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என்ற திட்டமிட்ட சதியின் அடிப்படையில் தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறையின் நடவடிக்கை அரங்கேறியுள்ளது. போராட்டக்காரர்களை குறிவைத்து, போராட்டத்தின் போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய துப்பாக்கி சூடு விதிமுறைகளை மீறி, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி திட்டமிட்டு 13 பேரை சுட்டுக்கொன்றுள்ளது என்பது தெளிவாகின்றது. இந்த அரச பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போதே விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டது தெளிவானது. போலீஸ் வேன் மீது ஏறிய கமாண்டோ படை வீரர்கள் பொதுமக்களை ராணுவ வீரர்கள் போல் குறிவைத்துச் சுட்டது இதுவரை இல்லாத ஒன்று. ராணுவத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பலநூறு மீட்டர் சீறிப்பாயும் செல்ஃப் லோடிங் ரைபிள் வகை துப்பாக்கிகளை கொண்டு அப்பாவி பொதுமக்களை கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அது திட்டமிட்ட காவல்துறை படுகொலைகள் தான் என்பது தெளிவாகின்றது. ஆகவே, அந்த சம்பவத்தில் ஈடுபட்ட, உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதோடு, காவல்துறை விதியை மீறிய அவர்கள் இனி அந்த பணியில் தொடர முடியாத வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT