Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்! மு.க.ஸ்டாலின்

Published on 26/03/2018 | Edited on 26/03/2018



 

sterlite



தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் அந்த மாவட்ட மக்களும், அந்த மண்ணும் கடும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு வலிமையுடன் போராடி வருகிறார்கள். தன்னெழுச்சியான அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தார்மீக ஆதரவினைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பேராபத்துகளை உடனடியாக அரசாங்கம் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கெடுக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதை சட்டங்கள் வலியுறுத்தும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் தாமிரபரணி ஆறும், அதனால் பயன்பெறக்கூடிய விளைநிலங்களும் பாழ்பட்டுக் கிடப்பதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் உயிருக்கும் உலைவைக்கும் வகையில் புற்றுநோய், தோல்நோய்கள் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்கி வருகிறது.  இந்த ஆலையினால் நிலத்தடி நீரில் தாமிரம், ஆர்சனிக், புளோரைடு, குரோம் உள்ளிட்ட நச்சுப்பாதிப்புகள் கலந்துள்ளன.  நிலத்தடி நீர் பாழ்பட்டதால் மண் பாதிப்படைந்து மக்களின் உயிர்ப்பலி தொடர்கிறது.
 

இதனைக் கூர்ந்து கவனித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டுத்துறை, உரியமுறையில் செயல்படாத காரணத்தினால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பலரும் புற்றுநோய்க்குள்ளாகி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கொடூரமும் தொடர்கிறது. இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்துவதுடன், தற்போது செயல்படும் ஆலையின் விதிமீறல்கள் மீது உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசர அவசியத்தையும் உணர்த்துகிறேன்.


 

sterlite



தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் மண்ணுக்கும், மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் உயிரைக் காவு வாங்கி, மண்ணை பாழ்படுத்தும் கேடான செயல்பாடுகளை அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்