Skip to main content

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களுடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

sterlite plant opening for oxygen supply people oppose

 

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்; பலர் காயமடைந்தார்கள்.

 

பின்னர் ஆலையைத் தமிழக அரசு மூடியது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, தற்போதைய கரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, “நாங்கள் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயார் செய்து இலவசமாகவே வழங்குகிறோம்” என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

 

விசாரணைக்குப் பின்பு, 4 மாதங்களுக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என சில வழிகாட்டு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டி அதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனாலும் தூத்துக்குடி மக்களிடையே ஆலை திறப்பிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இயக்கம், “மக்களின் கருத்துப்படி ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் பாத்திமாபாபு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் வக்கீல் அரிராகவன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அது தொடர்பாக மனு அளித்தனர்.

 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்டித்து இன்று (29.04.2021) கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்பபை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் வெள்ளை சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து செல்ல வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை அட்டைகளை வைத்து அறவழிப் போராட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார் வக்கீல் அரிராகவன்.

 

இதனிடையே,, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களை ஏந்தியாவாறு ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட அவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அவர்களின் குழந்தைகளும் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளில் ஒரு சிறுவன், கடுமையாகக் கோஷங்களை எழுப்ப அதனைத் தொடர்ந்து உறவினர்களும் கண்டனக் குரலெழுப்பினர். ‘போராட்டம் இது போராட்டம்; மக்களுக்கான போராட்டம். கேக்கலையா கேக்கலையா எங்களின் குரல் கேக்கலையா. அனுமதிக்காதே அனுமதிக்காதே தட்டுப்பாடு என்ற பெயரில் ஆலையைத் திறக்க அனுமதிக்காதே. மத்திய அரசே நாடகமாடாதே. நாசகார ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்’ என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். நாளுக்கு நாள் ஸ்டெர்லைட் திறப்பு அனுமதியை எதிர்த்து மக்கள் போராட்டம் தீவிரமாகிறது.

 

 

சார்ந்த செய்திகள்