ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி தரலாமா? - தமிழக முதல்வர் ஆலோசனை!

STERLITE PLANT ALL PARTIES MEETING CM DISCUSSION

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள,வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (26/04/2021) மீண்டும் வர உள்ளது.

இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கனிமொழி எம்.பி., பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார், தேமுதிகசார்பில் அன்புராஜ், பாலாஜி, பாமக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும், ஆலையை தமிழக அரசே ஏற்று ஆக்சிஜன் உற்பத்தியை செய்யலாமா? என்பது குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு, இன்று (26/04/2021) காலை 11.00 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்தே, நீதிபதிகள் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

cm edappadi palanisamy discussion Sterlite plant Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe