“புகார்களை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன”-அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Steps are being taken to rectify the complaints

கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் 2800 பேருக்குத் தாலிக்குதங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “கோவையில் 2800 மகளிருக்கு ரூ.21.65 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இன்று செயல்படுத்தப்படுகிறது. கோவையில் கோவிட் பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்ற புகார் நிறைய இடங்களில் இருந்து வருகிறது. இதைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சூயஸ் திட்டம், குப்பை எடுப்பதை தனியாருக்கு விட்டதில் இருக்கும் குளறுபடிகள் போன்றவை விசாரணையில் இருந்து வருகிறது. விசாரணை முடிந்த பின் அரசு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுக்கடைகளை மூட கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, கரோனவைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப அரசு செயல்படும். தமிழகத்தில் 215 துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்னும்73 துணை மின் நிலையங்களுக்கு இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும். கோவையை அச்சுறுத்தும் சிறுத்தையைப் பிடிக்கும் பணியை வனத்துறை வேகப்படுத்தி இருக்கின்றனர். பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாதபடி சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் 16 கோடி அளவிற்கு கேட்கப்பட்ட டெண்டர் இந்த முறை 28 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. கூடுதலாக 12 கோடி ரூபாய் டெண்டர் வந்துள்ளதுடன் 13 ஆயிரம்பேர் விண்ணப்பத்துள்ளனர். கடந்த ஆட்சியில் இது 6400 பேராக இருந்தது. பார் விவகாரத்தில் இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. நாளை முதல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. நேர்காணல் நிறைவுக்குப் பின்பு கூட்டணிக்கட்சிகளுடன் மாநகராட்சி வார்டு பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Coimbatore senthilbalaji
இதையும் படியுங்கள்
Subscribe