
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கோவைக்கு விசிட் அடித்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியாநாத்துக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பின் போது யோகி ஆதித்தியநாத்திடம் தமிழர்களின் ஆன்மிக பக்தர்களின் நலன்களுக்காகவும், பெருந்தலைவர் காமராஜரின் புகழை வட இந்தியாவில் நிலை நிறுத்தும் வகையிலும் முக்கியக் கோரிக்கையை வைத்திருக்கிறார் தமிழக பாஜகவின் கலாச்சாரப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.
வட இந்திய இந்துக்களின் புனித ஸ்தலமாக வாரணாசியும், தென்னிந்திய இந்துக்களின் புனித ஸ்தலமாக ராமேஸ்வரமும் கருதப்படுகிறது. வாரணாசிக்கு தமிழக பக்தர்களும், ராமேஸ்வரத்துக்கு வட இந்திய யாத்ரிகர்களும் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வகையில் வாரணாசி-ராமேஸ்வரத்துக்கு நேரடி விமான சேவையை ஏற்படுத்தித் தரவேண்டும். அதேபோல, வாரணாசியில் தமிழகத்திற்காக குறிப்பிட்ட அளவில் நிலம் ஒதுக்கித் தந்தால் அந்த இடத்தில் தமிழக பக்தர்களுக்காக தமிழக அரசு தங்குவதற்கு வசதியான கட்டிடத்தை உருவாக்கிக் கொள்ளும். அதனால், தமிழகத்திற்காக குறிப்பிட்டளவில் நிலம் ஒதுக்கித் தாருங்கள்.
தமிழகத்தின் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களிண் உரிமைகளுக்காகப் போராடியவர். தேசிய அளவில் அரசியலின் கிங் மேக்கராக இருந்தவர். அவரின் புகழ் தேசமெங்கும் பரவும் வகையில் அவருக்கு வாரணாசியில் மிகப் பிரமாண்டமான சிலை ஒன்றை அமைக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதித்யாநாத்திடம் கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். கோரிக்கையைப் படித்துப்பார்த்த யோகி, "சிறப்பான கோரிக்கை. நிச்சயம் இதனைச் செயல்படுத்த ஆலோசிக்கிறேன்" என்று உறுதி தந்துள்ளார்.