State level post in BJP for famous person

Advertisment

சென்னையை அடுத்துள்ள நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆர்.கே. சூர்யா. இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்ளிட்ட அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து கட்சியில் இணைந்த உடனே பாஜகவின் பட்டியலின அணியின் மாநிலச் செயலாளராக ரவுடி ஆர்.கே. சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து ரவுடி ஆர்.கே. சூர்யா பாஜகவின் செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் வேத சுப்ரமணியத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கட்சியில் இணைந்த உடனே பாஜகவின் பட்டியலின அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். தன் மீது 225க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தாலும், தற்போது எந்த வழக்கிலும் பிடியாணை இல்லை. இதில் பாதி வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து முடித்துவிட்டேன். எஞ்சிய வழக்குகளையும் விரைவில் முடிக்க உள்ளேன். தனது பெயரை பயன்படுத்தி யாராவது மிரட்டினால் காவல்துறையை அணுகலாம்” என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இவரது மனைவியும் பாஜக மாவட்ட மகளிரணி தலைவியுமான விஜயலட்சுமி கடந்த 2021 ஆம் ஆண்டு நெடுங்குன்றம் ஊராட்சி துணைத்தலைவராகப் பதவியேற்கும் போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையின் ‘ஏ பிளஸ்’ ரவுடிகள் பட்டியலில் ரவுடி ஆர்.கே. சூர்யா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.