Skip to main content

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Removal of 5 kg sphincter tumor from female stomach; Achievement of Government Medical College Doctors

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை  அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.