State Conference of Agricultural Workers Union started with rally

Advertisment

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து பல நூற்றுக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள், செம்படைத் தோழர்கள் சனிக்கிழமை அன்று மாலை புதுக்கோட்டையில் அணி, அணியாகத் திரண்டு குவிந்தனர். புதுக்கோட்டை பால் பண்ணை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

10 சீருடைப் பெண்களின் கொடி அணிவகுப்பு, 10 சீருடை ஆண்களின் கொடி அணிவகுப்பு, செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைகள், வான வேடிக்கைகள், விண் அதிரும் கொள்கை முழக்கங்களுடன் பேரணி திலகர் திடல், பழனியப்பா முக்கம், மேல ராஜவீதி, தெற்கு நான்காம் விதி, அண்ணா சிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பேரணியில் அகில இந்திய, மாநிலத் தலைவர்களை தொடர்ந்து மாவட்ட வாரியாக பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்து வந்தனர். பேரணி பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.

பொதுக்கூட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விதொச மாநில செயலாளர் அ.பழனிசாமி, துணைத் தலைவர் பி.வசந்தாமணி உள்ளிட்டோர் பேசினர்.