
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து, சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (25.03.2021) சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 70 குழுக்கள், வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தபால் வாக்குகளை சேகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான 6,992 பேரிடமும், 308 மாற்றுத்திறனாளிகளிடமும் என மொத்தம் 7,300 பேரிடம் (சென்னையில் மட்டும்) தபால் வாக்குகள் பெறப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு குழு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒருநாளைக்கு 15 தபால் வாக்குகளைப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.