Advertisment

தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை வைத்துக் கொண்டு குற்றங்களை கலையமுடியாது;மாற்றத்தை கல்வியிலிருந்து தொடங்க வேண்டும்-சீமான்

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டு வரி உள்ளிட்டவற்றிற்கு அரசின் அனுமதிபெற்று சென்னை - கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி கடந்த 12-10-2018 அன்று தமிழக அரசு, மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி அவசர அவசரமாக அனைத்து வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கியது. வீடிழந்த நிலையில் இருக்க இடமின்றி ஆதரவற்று துயருற்று நிற்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்திநாம் தமிழர் கட்சி சார்பாகதலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் அவர்களின் தலைமையில்இன்று 16-10-2018 செவ்வாய்க்கிழமை மாலை 04 மணியளவில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

seeman

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில் கூறியதாவது,

நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டியக் கட்டிடங்களை அப்புறப்படுத்தக் கூறும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துகிறோம் என்கிற பெயரில், அம்பத்தூரிலுள்ள முத்தமிழ் நகர், கங்கை நகர், மூகாம்பிகை நகர், கள்ளிக்குப்பம் போன்றப் பகுதிகளில் 589 வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டது தமிழக அரசு. 25 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை ஏரிகளை விரிவாக்கம் செய்கிறோம் எனக் கூறி தகர்த்திருக்கிறார்கள். இவ்வளவு ஆண்டுகளாக அம்மக்கள் அங்கு குடியிருந்தபோது அது ஆக்கிரமிக்கப்பட்டது என அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரியாதா? அவர்கள் ஆக்கிரமித்தார்கள் என்றால் அவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் அனுமதி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கியது அரசுதானே? அப்போது தெரியாதா இவர்களுக்கு இது ஆக்கிரமிக்கப்பட்ட நிலமென்று?

Advertisment

seeman

சாலையை இட்டு கழிவுநீர் வடிகால் அமைத்து தெருவிளக்குகளை அமைத்துக் கொடுத்து மக்களிடம் வரி வசூல் செய்த அரசு, திடீரென்று வந்து நின்று வீடுகளை இடிப்பது என்பது ஏற்புடையதா? பொருட்களையும், உடைமைகளையும் எடுத்துக் கொள்ளக்கூடக் காலநேரம் அளிக்காது அவசர அவசரமாக வீடுகளை இடிக்க வேண்டியத் தேவையென்ன? மக்களின் வாழ்விடம் இங்கிருக்கும்போது அவர்களைப் பெரும்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா? படித்துக் கொண்டிருக்கிற 500க்கும் மேற்பட்ட மாணவப்பிள்ளைகளின் கல்வி வீணாகிவிடாதா? குறைந்தபட்சம், இப்பகுதிக்கு அருகிலேயாவது வீடுகளைக் கட்டிக் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் போராடுகிறோம். மேலும், வீடுகளோடு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவைகளையும் இழந்துவிட்ட மக்களுக்கு உடனடியாக அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

seeman

ஏறக்குறைய ஒரு கோடி வடவர்கள் தமிழகத்தில் குடியேறிவிட்டார்கள். அவர்களுக்கு குடியேறிய இரு மாதங்களில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிடுகிறது. ஆனால், கேரளாவில் 15 ஆண்டுகள் வசித்தால்தான் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இவ்வாறு வடவர்கள் அதிகப்படியாகக் குடியேறுவதால் தமிழர்களுக்கான அதிகாரத்தைத் தமிழர்கள் அல்லாதோர் தீர்மானிக்கிற நிலை பிறக்கிறது. இதனால், சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்படும் நிலை தமிழர்களுக்கு உருவாகிற பேராபத்து இருக்கிறது. கோவையில் சசிகுமார் எனும் பாஜக பிரமுகர் இறந்தபிறகு, ஏற்பட்டக் கலவரத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையினர் யாரென்று பார்க்கிறபோது பெங்காலியும், பீகாரியும் அதிலிருந்தார்கள் எனத் தெரிய வருகிறது. இதே நிலை நீடித்தால் நாளை அவர்கள் தமிழர்களை அடித்துத் துரத்துகிற நிலை உருவாகும்.

தமிழக அரசு நினைத்திருந்தால் எவ்வளவோ உரிமைகளை போராடிப் பெற்றிருக்கலாம். ஆனால், அதனை செய்யவில்லை. நீட் தேர்வுக்கெதிராக மக்கள் மனங்களில் இருந்த எதிர்ப்பு நிலையைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. தங்கை அனிதாவின் மரணத்திற்குப் பிறகு இருந்த எழுச்சியைப் பயன்படுத்தி, அழுத்தத்தைக் கொடுத்து நீட் தேர்வுக்கு விலக்கினைப் பெற்றிருக்கலாம். ஆனால், இந்த அரசு செய்யாது. இது பாஜகவின் பினாமி அரசு. அவர்கள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு வெறுமனே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறர்கள்.

பாலியல் சிக்கல்கள் திரைத்துறை மட்டுமல்லாது எல்லாத்துறைகளிலும் இருக்கிறது. அது வெட்கக்கேடானது. இந்தச் சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்டதற்கானச் சான்றுதான் இது. தவறுகள் செய்கிறவர்கள் எல்லோரும் நிறைந்த மதுபோதையில்தான் இருக்கிறார்கள். தெருவுக்குத் தெரு மதுபானக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு இதனை மாற்ற முடியாது. இதற்கெதிரான மாற்றத்தைக் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும். கல்வி என்பது வாழ்க்கைக்காகவும், ஒழுக்கத்திற்கானதாகவும் இருக்க வேண்டும். குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதைவிடுத்து, குற்றத்திற்கானக் காரணத்தைத் தூக்கிலிட வேண்டும் என்கிறார் ரூசா. எனவே, இக்குற்றத்திற்குப் பொறுப்பேற்று வெட்கித் தலைகுனிந்து இதற்கெதிரான மாற்றத்தை ஒவ்வொருவரும் முன்னெடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

oru viral puratchi SEEMANISAM ntk seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe