நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தலை நடத்த அவசர சட்டத்தைப் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசுகையில்,

உள்ளாட்சி தேர்தலில் மேயர் தேர்தலை மறைமுகமாக நடத்தலாம் என்று நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இன்று மதியம் துணை முதல்வர் ஓபிஎஸ் அப்படியெல்லாம் எதுவும் பேசவில்லை. அப்படி இருந்தால் உங்களை அழைத்து நாங்களே சொல்வோம் என்று தெளிவாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
ஆனால் இன்று மாலையே அதற்கான ஆர்டினன்ஸ் போடப்பட்டு இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் இதை ஒரு சர்வாதிகாரத்தோடு ஜனநாயகம் பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் இந்த தேர்தலை நடத்துவதற்காக அதிமுக திட்டமிட்டிருக்கிறது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இதை சொன்னால் உங்களுடைய ஆட்சியிலும் நடத்தவில்லையா என்ற கேள்வியை கேட்பார்கள். உண்மைதான் நடத்தினோம் இல்லை என்று சொல்லவில்லை.
அன்று இருந்த அரசியல் சூழ்நிலை வேறு, அதுமட்டுமில்லாமல் அதனால் உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என இருந்தது. அதனால்தான் மீண்டும் அதை மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மாநகராட்சி மேயராக இருந்தாலும் சரி, நகராட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி, பேரூராட்சி தலைவராக இருந்தாலும் சரி அந்த அடிப்படையில் நடத்துவதுதான் சிறப்பாக இருக்கும். இது கண்டிக்கத்தக்கது என்றார்.