Skip to main content

"மாநிலத் தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்" - மேற்குவங்க மாநில ஆளுநர் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

stalin tweet about WestBengal Governor to prorogue the WB Assembly Session

 

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, ஜகதீப் தங்கர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்த நிலையில், மேற்கு வங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார் ஆளுநர் ஜகதீப் தங்கர். இதன்காரணமாக ஆளுநரின் அனுமதியின்றி மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றம் கூட வேண்டுமானால் ஆளுநரின் அனுமதியோடு, அவரது உரையோடு மட்டுமே கூட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

 

மேற்கு வங்கத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் சூழலில், ஆளுநர் சட்டமன்றத்தைக் கூட்ட அனுமதி மறுத்தால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது அம்மாநில அரசின் செயல்பாடுகளை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஆளுநரின் இந்த உத்தரவு, அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிக்கும் வழி வகுக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், மேற்குவங்க ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மேற்குவங்க  ஆளுநரின் செயல் ,விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு  எதிரானது .ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது .அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத் தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்