Skip to main content

கொடநாடுகொலை வழக்கில் சிறைக்கு போகப் போகிறார் எடப்பாடி! -ஸ்டாலின்

 

stalin


 

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலினும் பெரும்பாலான மாவட்டத்தில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார். அதுபோல் திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை தொகுதியில் இருக்கும் பள்ளபட்டி ஊராட்சி சபைக் கூட்டத்திலும் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
 

முதலில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பேசத் தொடங்கிய ஸ்டாலின்... கடந்த ஜனவரி 3ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்ததின் மூலம் 95 சதவீதம் ஊராட்சி சபைக் கூட்டங்கள் முடிந்துவிட்டது. வரும் 17 ஆம் தேதியோடு ஊராட்சி சபைக்கூட்டம் முடிய உள்ளது.  இந்த ஊராட்சி சபைக்கூட்டம் மக்களுக்கு பயன்படும் விதமாக நடந்து வருகிறது. தற்போது மத்திய, மாநில அரசுகள் திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். தேர்தல் வரப் போவதை முன்னிட்டு மத்திய அரசு ஆறாயிரம் தருவதாக கூறி முன்கூட்டி 2000 தர மோடி தயாராகி வருகிறார். அதுபோல் எடப்பாடியும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 2000 ரூபாய் தருகிறேன் என அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.


இது ஓட்டுக்காக கொடுக்கக்கூடிய பணமே தவிர இந்த எடப்பாடி ஆட்சி இரண்டு வருடத்தில் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக மக்களுக்கு கொண்டுவரவில்லை. தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்திருக்கிறார் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு, தாலிக்கு தங்கம் திட்டம், சுய உதவிக்குழு, மருத்துவக்கல்லூரி திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் 7 கோடி தள்ளுபடி இப்படி பல திட்டங்களை மக்களுக்கு கொண்டுவந்தார்.


மக்கள் தங்களது தொகுதியிலுள்ள குறைகளைக் கூறினர். அதன்பின் இறுதியாக பேசிய ஸ்டாலின்... நீங்கள் கூறிய குறைகளையெல்லாம் கோடிக்கணக்கில் திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் அந்தந்த பகுதிகளில் தலைவர்களும், மெம்பர்களும் வந்து இருப்பார்கள். அவர்கள் மூலம் உங்கள் குறைகளை சொல்லி இருந்தால் அதை நிவர்த்தி செய்து இருப்பார்கள். நாங்களும் இப்படி ஒரு ஊராட்சி சபை கூட்டம் போட வேண்டியதில்லை. அதனாலதான் ஊராட்சி சபை கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி உங்களுடைய குறைகளை கோரிக்கைகளையும் திமுக ஆட்சி வந்தவுடன் உறுதியாக  நிறைவேற்றி கொடுப்போம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன் நாங்கள் எப்பொழுதுமே சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்.
 

ஊழல், கோமாளித்தனம் மந்திரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அதுபோல் ஜெ வின் கொடநாடு பங்களாவில் ஐந்துபேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த கொலைக்கு எடப்பாடியும் உடந்தை என்று நாங்கள் சொல்லவில்லை, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கொலைகார ஆட்சிதான் இங்கே நடக்கிறது. அதுபோல் கூடிய விரைவில் இந்த கொலைவழக்கு மூலம் எடப்பாடியும் சிறைக்குப் போகப்போவது உறுதி என்று கூறினார். இந்த ஊராட்சி சபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி. தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு  மாவட்ட செயலாளரும்மான சக்கரபாணி. பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் உள்பட மாவட்ட பொறுப் பாளர்களுடன்  நகர. ஒன்றிய. பொறுப்பாளர்கள் மற்றும் சார்புஅணி பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்