ADVERTISEMENT

ஸ்டாலின் சோனியா சந்திப்பு! -கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு

02:12 PM Dec 09, 2018 | elaiyaselvan

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி அம்மையார் அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கலைஞர் அவர்களின் திருஉருவச் சிலை திறப்பு விழா அழைப்பிழை அளித்ததுடன்

ADVERTISEMENT

சோனியாகாந்தி அம்மையார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்

கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை வருகிற 16-12-2018 அன்று, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்கள் திறந்து வைக்கும் விழா நடைபெற உள்ளது.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (9-12-2018) காலை, புதுடெல்லியில் உள்ள திருமதி சோனியா காந்தி அம்மையார் இல்லத்திற்கு நேரில் சென்று, கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழா அழைப்பிதழினை அளித்தார்.

அத்துடன், சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து அஜயன் பாலா அவர்கள் எழுதிய “செம்மொழிச் சிற்பிகள்” நூலினை வழங்கி வாழ்த்து தெரிவித்ததோடு; பின்வரும் “பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி”யையும் வெளியிட்டார்.

"72 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அம்மையார் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்ட அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச் செம்மொழியே எனப் பிரகடனப்படுத்துவதற்கு மிகவலிமையான அடித்தளம் அமைத்தவர்.

மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும்,அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார். பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட அன்னை சோனியா அவர்கள், நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்!"

இந்நிகழ்வின்போது அகில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ராகுல்காந்தி, முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கனிமொழி, எம்.பி., கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்பின் போது, காவிரியின் குறுக்கே, கர்நாடகா அரசு “மேகதாது அணை” கட்டுவது குறித்து, திருமதி சோனியாகாந்தி அம்மையாரிடமும், காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களிடமும் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT