ADVERTISEMENT

"திருமணத்தை நடத்தி வைத்த மண்டபத்திலேயே சிறை வைக்கப்பட்டேன்..." - ஸ்டாலின்

10:14 PM May 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (28-05-2018) ராயபுரத்தில் நடைபெற்ற இப்தார் விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை விவரம்:

ADVERTISEMENT

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில், திருப்பூர் அல்தாப் அவர்கள் முன்னின்று நடத்தி வரும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில், தொடக்க காலங்களில் தலைவர் கலைஞர் பங்கேற்று வந்தாலும், உடல் நலிவுற்று ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் ஆளாக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தால், அவரது சார்பில் தொடர்ந்து நான் இப்தார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்று வருகிறேன். இந்த நிகழ்ச்சி நடைபெறும் ரம்ஜான் மஹாலில் கடந்த 24 ஆம் தேதியன்று நான் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டு இருந்ததை இந்த நேரத்தில் எண்ணி பார்க்கிறேன். இன்று உங்களால் சிறப்பிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் கைதியாக சிறைபிடிக்கப்படவில்லை என்றாலும் உள்ளத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறேன். உங்களுடைய உள்ளங்களில் நானும், என்னுடைய உள்ளத்தில் நீங்களும் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறோம்.

இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும், 24 ஆம் தேதி இந்த மண்டபத்தில் நான் சிறைபிடிக்கப்பட்டு இருந்தேன். அடுத்த நாள் 25 ஆம் தேதி அச்சிறுபாக்கத்தில் ஒரு மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தேன். அதில் மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால், அதேநாள் காலையில் தான் அந்தத் திருமண மண்டபத்தில் ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, மதுராந்தகம் சென்று மறியலில் ஈடுபட்டு, பிறகு எங்கு திருமணத்தை நடத்தி வைத்தேனோ, அதே மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டேன்.

நபிகள் நாயகம் அவர்கள் எந்த லட்சியத்துக்காக, எந்த உணர்வோடு வாழ்ந்து காட்டினாரோ, எந்த சமுதாயம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று பாடுபட்டாரோ, எப்படிப்பட்ட தியாகங்களை அவர் செய்தாரோ, அதையெல்லாம் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த புனித ரமலான் இப்தார் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க செல்லவிருக்கிறேன். எனவே, நீண்ட நேரம் பேச முடியாத நிலை இருக்கிறது. நாளை சட்டமன்றம் கூடவிருக்கிறது. சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் நாளை வெடிக்க இருக்கிறது, எதிர் கட்சி என்றமுறையில் என்னவிதமான உணர்வுகளை அங்கு வெளிப்படுத்தி, கேள்விகளை எழுப்பவிருக்கிறோம், என்பதை நாடே எதிர்பாத்துக் காத்திருக்கிறது.

கடந்த ஒரு வாரகாலத்தில் தமிழகத்தில் நடந்துள்ள அக்கிரமங்கள், அநியாயங்கள், தூத்துக்குடியில் 13 பேருக்கு மேல் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான கோர சம்பவம், அதற்கெல்லாம் காரணமானவர்கள் யார், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா, துப்பாக்கிச்சூடு நடத்தும் ஆணையை வழங்கியது யார், அந்த உத்திரவு எங்கிருந்து வந்திருக்கிறது என்பதெல்லாம் இன்றைக்கு கேள்விக்குறியாக இருந்தாலும், இதற்கெல்லாம் முழு காரணமாக இருந்தவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதன்பிறகாவது உரிய நடவடிக்கையை எடுத்தார்களா என்றால் அதுவும் கிடையாது.

நான் இன்னும் வேதனையோடு சொல்வதென்றால், இந்தியாவின் பிரதமராக, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சியை வழிநடத்தி வரும் பிரதமர் மோடி அவர்கள், வெளிநாடுகளில் அதிகமாக சுற்றிக் கொண்டிருப்பதால், அவர் வெளிநாட்டின் பிரதமராக கூட இருக்கலாம். அப்படிப்பட்ட பிரதமர் அவர்களை நான் கேட்க விரும்புவது, தமிழ்நாடும் இந்தியாவில் தான் இருக்கிறது, தமிழ்நாட்டில் 13 பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகி இருக்கின்றனர், ஆனால், ஒரு அனுதாய செய்தியாவது இதுவரை பிரதமரிடம் இருந்து வந்திருக்கிறதா என்றால் இல்லை. ஒருவேளை, குஜராத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பிரதமர் மோடி வாய் திறக்காமல் இருந்திருப்பாரா?

ஆனால், தமிழ்நாட்டில் நடந்துள்ள இப்படிப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வருத்தம் தெரிவித்து, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டாலும், படுகொலைக்கு ஆளானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் கூட இன்றைக்கு பிரதமர் இல்லை என்பதை எண்ணி பார்க்கின்றபோது, எப்படிப்பட்ட பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம் என்று வேதனைப்படுவதை தவிர வேறு வழியில்லை. ஏற்கனவே, மதச்சார்புடைய, மதக்கலவரங்கள் ஏற்படுத்தி நடைபெறுகின்ற ஆட்சி, ஏழை – எளிய குடும்பங்களில் பிறந்த மாணவ, மாணவியரின் மருத்துவக் கல்விக்கு செல்ல முடியாமல் நீட் தேர்வை நடத்தி வரும் ஆட்சி. காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆட்சி.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்படுகின்ற காரணத்தால் சுற்று வாட்டாரங்களில் இருக்கும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தீர்க்கவே முடியாத ஒரு கொடிய நோயான கேன்சரை பரப்பக்கூடிய அந்தத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் சூழல் வந்திருக்கிறது. எனவே, அதை மூட வேண்டும் என்று அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் அல்ல, பொதுநல சங்கங்களை சார்ந்தவர்கள் அல்ல, அந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதம், சாலை மறியல் என தொடர்ந்து 99 நாட்கள் போராடி, 100வது நாளன்று மிகப்பெரிய மக்கள் பேரணியை தூத்துக்குடி நகரத்தில் நடத்தப் போகிறோம் என்று முன்கூட்டியே அறிவித்து இருந்தார்கள். அதற்கு முறையான பாதுகாப்பை இந்த அரசு வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், பேரணியாக வந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்ட மிகப்பெரிய கொடுமையை நாம் இன்றைக்கு தமிழ்நாட்டில் அரங்கேறியதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் முடிவுகட்டக்கூடிய வகையில், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஏற்படுத்த தயாராக வேண்டும் என்பதற்கான உறுதியை எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டு, உங்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், இன்றைக்கும் நம்மையெல்லாம் வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT